×

மாமல்லபுரத்தில் கஞ்சா விற்பனை படு ஜோர் கேள்விக்குறியாகும் பள்ளி கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை: மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக மாமல்லபுரம் திகழ்கிறது. மாமல்லபுரம், என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கற் சிற்பங்கள் தான். இங்கு, பல்லவர்கள் கைவண்ணத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இன்றைக்கும் கம்பீரமாக நின்று சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சி தருகிறது. இங்கு, வரும் பயணிகள் இங்குள்ள சிற்பங்களை சுற்றிப் பார்த்து கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி குளித்தும், கடற்கரையில் அமர்ந்தும், நடந்தும் பொழுதை கழிக்கின்றனர். மேலும், இங்குள்ள புராதன சிற்பங்களின் மீது ஈர்ப்பு கொண்டு கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி, சீனநாட்டு அதிபர் ஜின்பிங் ஆகியோர் அரசு முறை பயணமாக சந்தித்து சிற்பங்களை சுற்றிப் பார்த்து பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டனர். இரு நாட்டு, தலைவர்கள் வருகையொட்டி மாமல்லபுரம் நகரமே மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலி, ஜொலித்தது. அப்படி, இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற இடத்தில் தற்போது கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. சென்னையில், இருந்து 60 கி.மீ. தூரத்தில் கடற்கரையொட்டி மாமல்லபுரம் என்னும் அழகிய நகரம் அமைந்துள்ளது. இங்கு, பல்லவர்களால் செதுக்கப்பட்ட சிற்பங்களான வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கிருஷ்ணா மண்டபம், புலிக்குகை, கணேச ரதம், கடற்கரை கோயில் ஆகியவை உள்ளன. மேலும், 108 திவ்ய தேசங்களில் 63 வது தேசமாக விளங்கும் ஸ்ரீ தலசயன பெருமாள் எழுந்தருளி உள்ளார். இதனால், கோயில் நகரம் என்ற பெருமையும் மாமல்லபுரத்திற்கு உண்டு. இந்நிலையில், கஞ்சா விற்கும் போதை நகரமாக மாறி வருவதாக, சமூக ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாமல்லபுரம் மீனவர் பகுதி, ஒத்த வாடை தெரு, ஐந்து ரதம், அண்ணாநகர், பூஞ்சேரி கூட்ரோடு, பூஞ்சேரி அடுக்குமாடி குடியிருப்பு, தேவனேரி, எச்சூர் காடு, பையனூர் , மணமை, பட்டிப்புலம் பக்கிங்ஹாம் கால்வாய், பேரூர், தெற்குபட்டு சவுக்குத் தோப்பு, திருவிடந்தை உள்ளிட்டப் பகுதிகளில் சந்து, பொந்துகளில் எல்லாம் கஞ்சா பொட்டலங்கள் கூவிக், கூவி அமோகமாக விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. அதேப்போல், திருப்போரூர் பகுதியில் இருந்து கோவளத்திற்கு கொண்டு வந்து கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் விற்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வட மாநிலத்தில், இருந்து ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து, புரோக்கர்கள் மூலம் மாமல்லபுரத்திற்கு மொத்தமாக அனுப்பாமல், சில்லரையாக பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. கஞ்சா, விற்பவர்களை அவ்வபோது மாமல்லபுரம் போலீசார் பிடித்து வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தாலும், 4 அல்லது 5 நாட்களில் வெளியே வந்து போலீசாருக்கு தெரியாமல் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். மேலும், மாமல்லபுரத்திற்கு வந்தால் எந்த நேரமும் சகலமும் கிடைக்கும் என நினைத்து, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வந்து ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்கி சகலமும் அனுபவித்து செல்கின்றனர். அப்படி, வருபவர்கள் கடற்கரையொட்டி உள்ள ரெஸ்டாரன்ட், ரிசார்ட்களை தேர்ந்தெடுத்து தங்குகின்றனர். அதேப்போல், கஞ்சா விற்பவர்களுக்கு அரசியல் வாதிகள் முதல் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பிரபல ரவுடிகளுக்கு நெருக்கமாக இருப்பதால் காட்டிக் கொடுக்க பொதுமக்கள் பயப்படுகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,,, மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில்  கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சாவை சின்ன, சின்ன மடிப்புகளாக மடித்து வைத்து விற்பனை செய்கின்றனர். அப்படி, விற்கப்படும் கஞ்சா வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து அங்கிருந்து வியாபாரிகள் மூலம் மாமல்லபுரம் அனுப்பப்படுகிறது. இங்குள்ள, புரோக்கர்களிடம் வந்து சேர்ந்த பிறகு அவர்களிடமிருந்து இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கஞ்சா வாங்கி பயன்படுத்துவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இங்கு, பல்வேறு அரசு பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள, கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் தங்கியும், 3 அல்லது 5 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அறை எடுத்து தங்கியும் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக, பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்கப்படுகிறது. கஞ்சா, அடிப்பவர்கள் அதை பயன்படுத்திய சில நொடிகளிலேயே போதை தலைக்கு ஏறிவிடும். பின்னர், என்ன நடப்பது என்று அவர்களுக்கு தெரியாது. இந்த, நேரங்களில் தான் கொலை, கற்பழிப்பு, ஆட் கடத்தல், வழப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. கஞ்சா புகைப்பதால் நுரையீரல் பாதிப்பு மற்றும் வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள், உடல் சோர்வு ஆகியவை ஏற்படுகிறது. தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்துவதால் மிக விரைவில் உயிரிழக்கும் நிலை ஏற்படும். கஞ்சாவை, புகைத்து விட்டு நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு செல்லும் போது எந்தவித மாற்றமும் தெரியாது என்பதால் பெற்றோராலும் கண்டுபிடிக்க முடியாது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகுணா சிங் மாமல்லபுரம் நகரின் மீது தனி கவனம் செலுத்தி, கஞ்சா விற்கும் நபர்களை பிடித்தும்,  மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கஞ்சா, அடிப்பவர்கள் அதை பயன்படுத்திய  சில நொடிகளிலேயே போதை தலைக்கு ஏறிவிடும். பின்னர், என்ன நடப்பது என்று  அவர்களுக்கு தெரியாது. இந்த, நேரங்களில் தான் கொலை, கற்பழிப்பு, ஆட்  கடத்தல், வழப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது….

The post மாமல்லபுரத்தில் கஞ்சா விற்பனை படு ஜோர் கேள்விக்குறியாகும் பள்ளி கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை: மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Badu Jor ,District SP ,Mammallapuram ,Padu Jor ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...